உலக மக்கள் நலன் வேண்டி கோவில்பட்டியில் 21 அரிவாள் மீது நடந்து ஆசி வழங்கிய பூசாரி

கோவில்பட்டி : உலக நன்மை வேண்டி கோவில்பட்டி அருகே கருப்பசாமி கோயிலில் 21 அரிவாள்கள் மீது நடந்து சென்று பூசாரி அருளாசி வழங்கினார். கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் 64வது ஆண்டு கொடைவிழா, நேற்று முன்தினம் (6ம் தேதி) துவங்கியது. 2 நாட்கள் நடந்த விழாவில் நேற்று காலை 9 மணிக்கு 108 பால்குடம், 21 அக்னி சட்டிகள் எடுத்து பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.

காலை 10 மணிக்கு பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டு கருப்பசாமியை வழிபட்டனர். மதியம் 12 மணிக்கு படிபூஜை, பழபூஜை நடந்தது. 12.30 மணியளவில் உலக மக்கள் நலன் வேண்டியும், மழை பொழிந்து இயற்கை வளம் செழிக்கவும், அனைவரும் நோய்கள் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் கோயில் பூசாரி கருப்பசாமி, 21 அரிவாள் மீது நடந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 12.45 மணிக்கு 68 கிலோ மிளகாய் தூள் கரைத்து கோயில் பூசாரி உடலில் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி தொழிலதிபர் முருகன் தலைமை வகித்தார். நாடார் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் சண்முகராஜா, ராமமூர்த்தி, திருமணிபாண்டியன், தொழிலதிபர்கள் ரத்தினராஜா, வினோத், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விழாவில் இளையரசனேந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: