எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்த நாட்டு மக்களுக்காகவே : கிளாம்பாக்கம் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

சென்னை: கூட்டணி கட்சி தலைவர்களுடன் தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் பிரதமர் மோடி. பிரச்சாரத்தை துவக்கி பேசிய அவர், தமிழ் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்த செம்மொழி. தமிழ் மக்களும், தமிழ் கலாச்சாரமும் மகத்தானவை என்றார். காசி தொகுதி வேட்பாளரான நான் தற்போது காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளேன். நகரங்களிலேயே சிறந்தது காஞ்சி என காளிதாசர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த காஞ்சிக்கு தலை வணங்குகிறேன் என்றார். மறைந்த ஜெயலலிதா கனவு கண்ட வளமான தமிழகத்தை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார். தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த MGR பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். விமான நிலைய அறிவிப்புகள் இனி தமிழிலும் இருக்கும் என்றார். தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும், தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.

இலங்கையில் 14,000 தமிழர்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். அதே போல விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சை வரையிலான சாலை திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கும்பகோணம் மகாமகம் திருவிழாவிற்கு பக்தர்கள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும். தமிழர்களுக்கு எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் விரைந்து நடவடிக்கை எடுப்பது பாரதிய ஜனதா அரசு தான் என்றார். தமிழகத்தில் விசைத்தறிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் 1,900 பேர் இலங்கை சிறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார் பிரதமர்.  எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்த நாட்டு மக்களுக்காகவே; மக்களின் ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறேன். நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருகின்றன; வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை. முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுவதில்லை;. நாட்டு மக்களே உச்சபட்ச கமாண்டர்கள் என்றார் பிரதமர்

முன்னதாக இந்திய நாட்டை ஆளும் தகுதியுள்ள ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் என சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும்  அதிமுக - பாஜக- பாமக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறினார். நாட்டை ஆளக்கூடிய வலிமை மற்றும் திறமை மிக்கவர் மோடி என்றார். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு விரைந்து பதிலடி கொடுத்தவர் பிரதமர். மேலும் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானியை உடனடியாக மீட்டவரும் மோடி தான் என கூறினார் முதல்வர் பழனிசாமி.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்தவர் பிரதமர் மோடி என்றார். மேலும் பேசிய முதல்வர் தமிழகம் சிறந்த நிர்வாகத்திற்கான 16 விருதுகளை பெற்றுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதலாவதாக திகழ்வதாகவும் கூறினார். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க கோரினார். முன்னதாக கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என நாடே சொல்வதாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: