ராணுவ வீரர்களை பொய்யர்களாக்கும் அமித்ஷாவின் செயலை நாடு பொறுத்து கொள்ளாது: டெல்லி முதல்வர் பாய்ச்சல்

புதுடெல்லி: ‘‘நமது படையினரை பொய்யர்களாக்கும் அமித்ஷாவின் செயலை நாடு பொறுத்துக் கொள்ளாது’’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமான படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், சுமார் 350க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதுவரை உறுதியான தகவல்கள் அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பல்வேறு யூகங்களின் அடிப்படையில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, “புல்வாமா தாக்குதலுக்கு பின், நம்மால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த இயலுமா என நாம் ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால், என்ன நடந்தது.

பாலகோட் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்” என கூறியிருந்தார். ஆனால், நேற்று காலை இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த விமானப்படை தளபதி பி எஸ் தனோவா, “இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் நாங்கள் கூற இயலாது. அதை அரசுதான் தெரிவிக்க வேண்டும்” என கூறினார். இதற்கிடையே, மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியாவும், “இந்த தாக்குதலின் நோக்கம் ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். கொல்வதற்காக அல்ல” என தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பாலகோட் தாக்குதலில் எவ்வளவு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை குறிப்பிட்டு எந்த எண்ணிக்கையையும் விமானப்படை கூறவில்லை. ஆனால், 250 பேர் உயிரிழந்ததாக அமித்ஷா கூறிவருகிறார். இதன் மூலம் நமது ராணுவ வீரர்களை பொய்யர்கள் என அமித்ஷா கூறுகிறார். இதுபோன்றவற்றை நாடு பொறுத்துக் கொள்ளாது. ஒட்டுமொத்த நாடும் நமது வீரர்களின் பின்னால் நிற்கிறது. ஆனால் பாஜவினர் மட்டும் நமது வீரர்களுக்கு எதிராக நிற்கின்றனர் என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: