ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் யோசனை தமிழகத்தில் நீர் மேலாண்மையை செயல்படுத்தினால் வறட்சி இருக்காது

மதுரை: நீர் மேலாண்மையை 100 சதவீதம் சிறப்பாக செயல்படுத்தினால், தமிழகத்தில் வறட்சியே இருக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை இல்லாமல் மிகவும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கின்போது கொள்ளிடத்தில் பாலங்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. எங்களது 85 ஆண்டு கோரிக்கையான கொள்ளிடம் காவிரி உபரிநீரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அக்னி ஆறு, தெற்கு வெள்ளாற்றுடன் இணைத்தால், மாவட்டம் முழுவதும் விவசாயம் பயன் பெறும்,   குடிநீர் பிரச்னை தீரும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீர் மேலாண்மையை  100 சதவீதம் சிறப்பாக செயல்படுத்தினால்,  தமிழகத்தில் வறட்சி என்பதே இருக்காது.  குடிநீர் பிரச்னையும் இருக்காது. முறையாக குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரி அணைகளின் கொள்ளளவை அதிகமாக்கினால்தான், அதிக நீரை தேக்க முடியும். இதனால் மக்கள் பயன்பெறுவர்’’ என கருத்து தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரப்பிரிவு முதன்மை பொறியாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14க்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: