ஈவு இரக்கமில்லாத காவல்துறை மனநலம் பாதித்தவரின் கைகளை கட்டி லத்தியால் சரமாரி தாக்கிய இன்ஸ்பெக்டர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

நாகை: நாகை அருகே மனநலம் பாதித்தவரை கைகளை பின்புறமாக கட்டி நடுத்தெருவில் கம்பால் இன்ஸ்பெக்டர் சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகை  மாவட்டம் கொள்ளிடம் அருகே பட்டவிளாகம் கிராமம் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (47). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு  திருமணம் ஆகவில்லை.  வீட்டில் தனியாக வசித்து வருகிறார். எதிர்  வீட்டில் உள்ள தனது அண்ணன் சார்லஸ் (55) என்பவரிடம் அடிக்கடி செலவுக்கு  பணமும், உணவும் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல்  நேற்று முன்தினம் அண்ணன் சார்லசிடம் செலவுக்கு பணம்  கேட்டு தொந்தரவு செய்ததால் கோபமடைந்த சார்லஸ் தம்பி ஜான்சன் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி கொள்ளிடம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில்  கொள்ளிடம் ஏட்டு கண்ணன் பட்டவிளாகத்திற்கு சென்று ஜான்சனை விசாரணைக்கு  அழைத்த போது ஏட்டு கண்ணனை ஜான்சன் ஒரு கட்டையால் தலையில் தாக்கியதாக  கூறப்படுகிறது. இந்த தகவலறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும்  போலீசாருடன் பட்டவிளாகத்தில் உள்ள  ஜான்சன் வீட்டிற்கு சென்றனர்.

 அங்கு  வீடு  மூடியிருந்தது. சினிமா பாணியில் கதவை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்து திறந்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று தரதரவென இழுத்து வந்து நடுத்தெருவில் நிற்க வைத்து ஜான்சனின் கைகளை பின்பக்கம் கட்டினர். அப்போது, ஜான்சன் துள்ளி ஏற முயற்சிக்கிறார். உடனே, மற்ற போலீஸ்காரர்கள்  பிடித்துக்கொள்ள நீண்ட லத்தியால் பின்பக்கமாக அவரை இன்ஸ்பெக்டர் சரமாரியாகத் பலமுறை  தாக்குகிறார். வலி தாங்க முடியாமல் ஜான்சன் துடியாய் துடித்தார். இதனை  பார்த்த கிராம மக்கள், இன்ஸ்பெக்டரை தட்டிக்கேட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் முனிசேகர் மிரட்டினார். பின்னர், ஜான்சனை இன்ஸ்பெக்டர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு  போலீஸ் வேனில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்தும் சரமாரியாக  தாக்கி உள்ளார்.

இத்தகவலை கேள்விபட்டு  புகார் கொடுத்த அண்ணன் சார்லஸே  கொள்ளிடம் காவல் நிலையம் வந்து நடக்க முடியாமல் வலியால் அவதிப்பட்ட   ஜான்சனை அழைத்து சென்றார்.  இச்சம்பவம் அறிந்த  சென்னையில் உள்ள  ஜான்சனின்  மூத்த அண்ணன் ஜார்ஜ் (60)  பட்டவிளாகம் வந்து ஜான்சனை  மருத்துவ உதவி அளிக்க  சென்னைக்கு நேற்று அழைத்து சென்றார். மனநலம்  பாதிக்கப்பட்டவர் என்றும் பாராமல் ஜான்சனை வீடு புகுந்து இன்ஸ்பெக்டர்  முனிசேகர் நடுத்தெருவில் கடுமையாக தாக்கிய சம்பவத்தை பார்த்த அனைவரும்  கண்ணீர் வடித்தனர். இன்ஸ்பெக்டர் அடிக்கும்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: