உபி.யில் மாணவர்கள் போல் தங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது

லக்னோ:  உத்தரப் பிரதேசத்தில் மாணவர்கள் என்ற பெயரில் தங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி நடந்த  தாக்குதலை  தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புல்வாமா பதற்றம் தணியாமல் இருக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்பு பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன. இதனால், நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபாண்டில் மாணவர் என்ற போர்வையில் தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை பற்றி தீவிரவாத தடுப்பு படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஷனாவாஸ் அகமத் மற்றும் அக்யும் அகமத் மாலிக் ஆகிய இருவரும் மாணவர் என்ற பெயரில் அப்பகுதியில் தங்கியிருந்தது உறுதியானது. அவர்கள் எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்கவில்லை. இவர்களில் ஷனாவாஸ், காஷ்மீர் மாநிலம் குல்காமை சேர்ந்தவன், மற்றொருவன் புல்வாமாவை சேர்ந்தவன் என்றும் தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஜிகாதிகள் தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எப்போது வந்தார்கள்?

உத்தர பிரதேச டிஜிபி ஒபி சிங் கூறுகையில், “ கைது செய்யப்பட்ட இருவரும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இங்கு வந்தார்களா? அல்லது அதற்கு முன்பே இங்கு வந்து விட்டார்களா என கூறுவது கடினம். அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு ஆள் சேர்த்தார்களா? அவர்களுக்கு எங்கிருந்து நிதி உதவி கிடைக்கிறது, ஆட்களை சேர்த்த பின்னர் அவர்களின் அடுத்த இலக்கு என்ன என்பது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாட்டில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டி இருப்பதை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு ரயில்களை குறி வைக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், நாடு முழுவதும்  ரயில் நிலையங்களில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும்படி ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது. மும்பையில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.  நீண்ட தூர ரயில்களில் மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: