நெல்லை மாநகராட்சியில் பகீர் மின்கட்டணத்தில் நூதன மோசடி அதிகாரி உட்பட 5 பேர் சஸ்பெண்ட்: 70 லட்சம் வரை சுருட்டியதாக புகார்

நெல்லை: நெல்லை மாநகராட்சி செலுத்திய மின்கட்டணத்தை நூதன முறையில் சுருட்டி கையாடல் செய்த புகாரில் நெல்லை மின்வாரிய அதிகாரி, கணக்கீட்டாளர்கள் 3 பெண்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் ெசய்யப்பட்டனர். நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், தெருவிளக்கு உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தும் மின்சாரத்திற்கு உரிய மின்கட்டணம் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பெயரில் செலுத்தப்படுகிறது. இதற்கான தொகை காசோலையாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு வழங்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படுவதால் பல லட்சம் வரை செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் காசோலையை மின்வாரிய ஊழியர்கள் பணமாக்கும்போது அந்த தொகையில் 80 சதவீதம் வரை வரவு வைத்து விட்டு மீதி பணத்தை தங்களுக்கு தெரிந்த நபர்களின் மின் கட்டணம் செலுத்தும் கணக்கில் முன்பணமாக வரவு வைத்துள்ளனர்.

அந்த நபர்களுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை வரும் மின்கட்டண பணத்தை அவர்களே பெற்று கட்டுவதாக கூறி அந்த தொகையை சுருட்டிக்கொள்வார்கள். இவ்வாறாக கடந்த  7 ஆண்டுகளாக மகாராஜநகர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் நூதன மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் சுருட்டியுள்ளனர். இதை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை.  இந்நிலையில் பாளையங்கோட்டையில் காவலர் குடியிருப்பு ஒன்று கட்டுவதற்கு 37 இணைப்புகளுக்கு அனுமதி கோரப்பட்டது. இதில் அவர்கள் கேட்ட கிலோவாட் திறனைவிட பாதி அளவு கிலோவாட் திறன் கேட்டதாக கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டு முறைகேடு செய்துள்ளனர். அதிகாரிகள் கம்ப்யூட்டர் பதிவுகளை ஆய்வு செய்த போது மாநகராட்சி கட்டிய மின்கட்டண பணத்திலும் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

 இதையடுத்து மோசடி மற்றும் கையாடலில் ஈடுபட்டதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி, 3 பெண்கணக்கீட்டாளர்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்காணிக்காத உதவி பொறியாளர் ஜனகராஜ் மானூருக்கு  இடமாறுதல் ெசய்யப்பட்டார். இதுகுறித்து வக்கீல் பிரம்மா கூறுகையில், சுமார் 7 ஆண்டுகளாக நூதன முறையில் மாநகராட்சி கட்டிய மின்கட்டண பணம் சுருட்டப்பட்டிருக்கிறது. இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ரூ.70 லட்சமோ அதற்கு மேலாகவோ ேமாசடி நடந்திருக்கலாம்.  எனவே இதன் மீது சாதாரண விசாரணை போதாது. சென்னை மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு நேரில் முகாமிட்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது மேலும் பல உண்மை தகவல்கள் வெளிவரலாம். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திய மின் கட்டணம் முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்று கண்காணிக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: