திமுக கூட்டணியில் தொகுதி இன்று அறிவிப்பு: காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சென்னை வருகை

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட மேலிட காங்கிரஸ் தலைவர்கள் இன்று சென்னை வருகின்றனர்.  நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளை முடிவு செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுவிட்டன. இதனால் திமுக கூட்டணி கட்சிகளை இறுதி செய்யும் முயற்சியில் தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் டெல்லி சென்றுள்ள மூத்த தலைவர்கள் அங்கு மேலிட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.  அதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் கேட்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பட்டியலுடன் ராகுல்காந்தியை சந்தித்து விவாதித்தனர்.

அதை தொடர்ந்து திமுக தரப்பில் டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களுடன் அகமது படேல், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் போன்ற மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக நிலை எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.   இதையடுத்து, திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடர்பான அறிவிப்பு இன்று சென்னையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேற்றிரவு சென்னை திரும்பினர். மேலும், காங்கிரஸ் மேலிட தலைவர்களான அகமது படேல், குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக் ஆகியோரில் இருவர் இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் இன்று மாலை கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: