அதிமுக கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கீடு தேசிய கட்சியான நாம் பாமகவை விட எந்த விதத்தில் குறைவு? பாஜ தலைவர்கள் கேள்வி

சென்னை: அதிமுக கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு பாஜ தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாமகவை விட எந்த விதத்தில் நாம் குறைவு எனவும் பாஜ தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தங்களுக்கு பாதிக்கு பாதி இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தினர். இதை கேட்டு அதிமுக அதிர்ந்து போனது. அவ்வளவு சீட்கள் ஒதுக்க முடியாது. பாஜவுக்கு தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு இல்லை. நோட்டோவுடன் தான் போட்டியிட்டு வருகின்றனர். மேலும் அதிமுக தலைவர்கள் சிலர் பாஜவை கூட்டணியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதை எல்லாம் சமாளித்து தான் பாஜவை கூட்டணியில் சேர்க்க வேண்டியது உள்ளது. அப்படியிருக்கும் போது அதிக இடங்களை கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அதிமுக பாஜவுக்கு கடிவாளம் போட்டது.

இதைத் தொடர்ந்து பாஜ இறங்கி வந்து 10 தொகுதிகளை கேட்டது. மேலும் சில குறிப்பிட்ட தொகுதிகளையும் பாஜ கேட்டது. இதற்கும் அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து அதிமுக, பாஜ பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அதிமுக இறங்கவில்லை. ஒற்றை இலக்க எண்ணில் தான் சீட் ஒதுக்கப்படும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது. அதிக அளவு சீட் கேட்டால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று  அதிமுக கைவிரித்தது. பாஜவுக்கு சாட்டை அடி கொடுக்கும் வகையில் முதலில் பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்தது. இதைத் தொடந்தே பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றவும் அதிமுக திட்டமிட்டிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. இதனால் பாஜ வெளியேறினால் யாருடனும் கூட்டணி வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து கொடுக்கும் சீட்டில் போட்டியிட பாஜ முடிவு செய்தது. அதை தொடர்ந்தே அவர்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு பாஜவில் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு 5 இடங்கள் என்பது பாஜவை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜ அரசால் தான் அதிமுக இன்னும் ஆட்சியில் நீடித்து வருகிறது. பாஜ இல்லை என்றால் அதிமுக ஆட்சி எப்போதே கவிழ்ந்திருக்கும். அந்த நன்றி விசுவாசம் கூட அதிமுகவுக்கு இல்லை. பாமகவை விட பாஜ எந்த விதத்தில் குறைந்து போய் உள்ளது. அப்படியிருக்கும் போது குறைந்த எண்ணிக்கையில் அவர்கள் ஒதுக்கிய சீட்களை எப்படி பெறலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், தற்போது தமிழக பாஜவில் புகைச்சல் உருவாக தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவிய தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: