தமிழ் புத்தாண்டு சித்திரை விருதுகள் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி இன்று வழங்குகிறார்

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விருதுகளை இன்று நடக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார். தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது கடந்த 2012ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு வரை 55 விருதுகளைத் தோற்றுவித்து வழங்கப்பட்டு வருகிறது. 2018-19ம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2019ம் ஆண்டில் வழங்கப்படும் விருதுகளாக மறைமலையடிகளார் விருது, அயோத்திதாசர் பண்டிதர் விருது அமைந்திருப்பதால் அதை விடுத்து 2018ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது க.முருகேசனுக்கும், சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமாருக்கும், ஜி.யு.போப் விருது கு.கோ.சந்திரசேகரன் நாயர், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது முனைவர் உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் மற்றும் 2017ம் ஆண்டிற்கான முதல்வர் கணினித் தமிழ் விருது வை.மதன்கார்க்கி (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கும்) வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மற்ற விருதுகள் பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.

மேலும் 2018ம் ஆண்டிற்கான சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, சீனிவாசன், ஜி.குப்புசாமி, அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செந்தில் குமார், பழனி.அரங்கசாமி, எஸ்.சங்கரநாராயணன், நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகை, தகுதியுரை வழங்கப்படும். மேலும், 2018ம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜீவகுமாரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாரதிதாசன், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும். அதேபோன்று மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படும். இந்த விருது பெறுவோருக்கு ரூ.25,000 விருதுத் தொகையுடன் தகுதியுரை வழங்கி சிறப்பிக்கப்படுவர். மொத்தம் 56 விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: