செய்யாறு அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு 5 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்கள்

செய்யாறு: செய்யாறு அருகே அசனமாப்பேட்டை கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கு 5 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்களை பெற்றோர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அசனமாப் பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 1938ம் ஆண்டு தொடங்கப்பட்டு 80 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் தொண்டு ஆற்றி வரும் இந்த பள்ளியில் அசனமாப்பேட்டை, தென்கழனி, பெருங்கட்டூர் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 111 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

அரசு பள்ளியில் அடிப்படை வசதியில்லாத நிலையில் தனியார் பள்ளியின் மீது பெற்றோர் மோகம் அதிகரித்து வருவதால், அசனமாப்பேட்டை கிராம பொதுமக்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்காமல் மற்ற பெற்றோர்களுக்கு முன் உதாரணமாக தங்கள் பிள்ளைகள் படிக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து தர முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று தனியார் பள்ளிக்கு இணையான வசதியை தங்களுடைய பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் ஏற்படுத்தி இன்றைய நவீன கல்வி முறைக்கு ஏற்ப ஸ்மார்ட் கிளாசிற்கு தேவையான உபகரணங்கள், தொடுதிரை போர்டு, ஸ்மார்ட் டி.வி, பிரின்டர், விளையாட்டு பொருட்கள், எழுது பொருட்கள், புத்தகங்கள், நாற்காலி, மேசை, மின்விசிறிகள், சில்வர் பாத்திரங்கள் என 5 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்களை வாங்கினர். பின்னர் அவற்றை அங்குள்ள சிவன் கோயிலிருந்து மேளதாளம் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு சென்றனர்.  

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.கோவிந்தராஜ் தலைமையில், கிராம கல்விக்குழுவாளர்கள் கன்னியப்பன், டி.காஞ்சனா உள்ளிட்ட பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மு.கல்யாணியிடம் கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினர். ஊர் பொதுமக்கள் மனமுவந்து பள்ளிக்கு ₹5 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்களை வழங்கிய பெற்றோர்களை பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் இ.பலராமன், ஆர்.அருணகிரி, கார்த்திகேயன், உதயசங்கர் ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆர்.உமா, இ.வினோதினி, பி.குமரவேல் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: