தலா 2000 வழங்கும் திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை 60 லட்சமானது எப்படி? தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்ந்தது எப்படி என்றும், அதிமுகவினரை பயனாளிகளாக சேர்ப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் மத்திய பாஜ அரசை எதிர்த்து குரல் கொடுக்கிற துணிவற்று அதிமுக அரசு உள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயல், வறட்சி பாதிப்பிற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட மொத்த தொகை 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. இதில் மோடி அரசு வழங்கியது வெறும் 3,700 கோடி. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாஜ அரசு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு புள்ளி விவரங்கள் தேவையில்லை. இதையும் எடப்பாடி அரசின் சாதனையாக சொல்லலாமா?

அடுத்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.1200 கோடி ஒதுக்கீட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் வழங்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 28.32 லட்சம் குடும்பங்கள்தான் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை திடீரென 60 லட்சமாக எப்படி உயர்ந்தது?

மக்கள் வரிப் பணத்திலிருந்து வாக்கு வங்கியை விரிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் அதிமுகவினரையே பகிரங்கமாக பயனாளிகளாக சேர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறேன். இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்பட்டுள்ள 60 லட்சம் பயனாளிகளின் பட்டியலை ஆன்லைனில் வெளியிட வேண்டும். கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: