கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்தோருக்கு வேலை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுவதற்கு அப்பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது நிலங்களை வழங்கினர். இது தொடர்பாக 1999ம் ஆண்டு ,மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது சி மற்றும் டி பிரிவில், நிலம் வழங்கிய குடுப்பதில் ஒருவருக்கு வேலை தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2017ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. அதில் சி,டி பிரிவிற்கு ஆல் எடுப்பதாக வெளியிட்டது. மேலும் நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ அப்பாவு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு சி,டி பிரிவில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அணுமின் நிலையம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடங்குளம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும், எனவே பணியாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக கூறினார்.

எனவே அணுமின் நிலையம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணுமின் நிலையம் அமைக்க இடம் வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும், மேலும் 28ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் என்றும் அதனை பரிசீலனை செய்து ஒரு மாதத்திற்குள் வேலை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வளவு விண்ணப்பங்கள் வந்தன என்பது குறித்த அறிக்கையை ஏப்ரல் 3ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: