ரபேல் விவகாரம் மக்களவையில் காங். வெளிநடப்பு: மாநிலங்களவையில் சமாஜ்வாடி அமளி

புதுடெல்லி: ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு(ஜேபிசி) விசாரணை தேவை என்ற கோரிக்கை நிராகரிப்பட்டதால், மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.மக்களவை நேற்று காலை தொடங்கியதும் கேள்வி நேரத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடத்தினார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பதாகைகளுடன், ரபேல் விவகாரம் பற்றி கோஷம் எழுப்பினர். இந்த அமளிக்கு இடையே  கேள்வி நேரம் 25 நிமிடங்கள் நடந்தது. அமளி தொடந்ததால் குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், ‘‘ரபேல் விவாதம் ஏற்கனவே நடந்து விட்டது. ஒவ்வொரு நாளும் நீங்கள் இடையூறு செய்ய முடியாது. இது தரம்தாழ்ந்த செயல்’’  எனக் கூறி அவையை நேற்று காலை 11.45 மணி வரை சுமார் 20 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.அவை மீண்டும் கூடியதும், ரபேல் விவகாரம் குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே  பேச முயற்சித்தார். ஆனால் அவரை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கார்கே,  ‘‘என்ன இது? எங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை’’ என்றார்.இதற்கு பதில் அளித்த சபாநாயகர், ‘‘நேரம் வரும் போது உங்களை பேச அனுமதிக்கிறேன். இப்போது உட்காருங்கள். நீங்கள் அதிகளவு சத்தம் போட்டுவிட்டீர்கள். உங்கள் தொண்டைக்கு சற்று ஓய்வு ெகாடுங்கள்’’ என்றார்.கார்கே கூறுகையில், ‘‘நீங்கள் பேச அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் இங்கு எதற்கு இருக்க வேண்டும்?’’ என்றார். கார்கே அருகே அமர்ந்திருந்த சோனியா காந்தியும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலையை  ஆட்டினார். அதன்பின் காங்கிரஸ் எம்.பிக்களுடன் பேசிய கார்கே அவையின் மையப் பகுதிக்கு சென்று ரபேல் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை தேவை என கோஷம் எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ரபேல் விவகாரம் அவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இதுகுறித்து தீர்ப்பளித்து விட்டது’’ என்றார். இதற்கு பதில் அளித்த கார்கே, ‘‘ஜே.பி.சி விசாரணையை கண்டு பிரதமர் பயப்படுகிறார். இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்காததால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’’ என்றார். அதன்பின் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு  செய்தனர்.மாநிலங்களவைஉத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உறுதி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று விமான நிலையம் சென்றார். அவரை போலீசார் தடுத்துள்ளனர்.  இந்த பிரச்னையை சமாஜ்வாடி உறுப்பினர்கள் மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் எழுப்ப முயன்றனர். அப்போது பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘நோட்டீஸ் கொடுக்காமல் இந்த விஷயத்தை  எழுப்ப அனுமதிக்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு செல்லுங்கள். அவையில் ஏற்கனவே அதிக நேரம் வீணாகிவிட்டது’’ என்றார். ஆனால் சமாஜ்வாடி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை முதலில் 2 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: