மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி பற்றி விமர்சனம் சட்டப் பல்கலை. பதிவாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் அதிரடி

சென்னை:  தனி நீதிபதியின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மீது உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் சங்கர் தாக்கல் செய்த மனுவில், “ தன்னை பதிவாளர் பணியில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகம்  விதிமுறைகளுக்கு முரணாக நீக்கியுள்ளது. தன்னை பணியில் மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.    இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துணை வேந்தர் வணங்காமுடி (தற்போது ஓய்வு) சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   இதை பரிசீலித்த நீதிபதி, பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் உரிய கல்வித் தகுதி கடைபிடிக்கப்படவில்லை. எனவே, கல்வித் தகுதி இல்லாதவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து அது தொடர்பாக  பல்கலைக்கழக துணை வேந்தர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் துணை வேந்தர் சாஸ்த்ரி, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என 34 பேரை சேர்க்குமாறு  நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி (பொறுப்பு) மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், மேல் முறையீட்டு மனுவில் பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி தனி நீதிபதியின் மரியாதைக்கு  பங்கம் விளைவிக்கும் வகையில் தனது வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். தனி நீதிபதி வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத தனது விருப்பத்திற்கு ஏற்ப உத்தரவிட்டுள்ளார் என்று அவர்  பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் வரம்பு  மீறியதாக உள்ளது.  இதுபோன்ற செயல்களை இந்த நீதிமன்றம் ஏற்காது. இந்த நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.  எனவே, பதிவாளர் மீது இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அவர் மீது ஏன் நீதிமன்ற வழக்கை தொடரக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த நோட்டீசை  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பிப்ரவரி 15ம் தேதிக்குள் பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்க நடவடிக்கை எடுத்து அது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.  வரும் 18ம் தேதி ஜெயந்தி  கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: