புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க கோரி வழக்கு எதிர்க்கட்சி ஆட்சியில் அமைத்ததால் வள்ளுவர் சிலையை விட்டு விடுவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை:  புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிய வழக்கில், எதிர்க்கட்சி ஆட்சியில் அமைத்ததால் திருவள்ளுவர் சிலையை விட்டு விடுவதா என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டது. உலகின் முதல் கருங்கல் சிலையான இதைக்காண நாட்டின் பல்வேறு பகுதியினர், வெளிநாட்டினர் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், தமிழக சுற்றுலாத்துறைக்கும் அதிகளவு வருவாய் கிடைத்தது. 3 ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசி சிலை புதுப்பிக்கப்படும். கடைசியாக கடந்த 2013ல் புதுப்பிக்கும் பணி நடந்துள்ளது. 5 ஆண்டுக்கு மேல் ஆன நிலையில், ரூ.1.10 கோடி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. ஆனால், பணிகள் முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது.

மேலும், பராமரிப்பு பணி நடப்பதால் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. படகு போக்குவரத்தும் இயக்கப்படவில்லை. புதுப்பிக்கும் பணிகள் பாதியில் நிற்பது மிகுந்த வேதனை தருகிறது. சுற்றுலாத்துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நூலகமும் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், கடலின் ஆழத்தை அதிகரித்து படகு போக்குவரத்ைத நிறுத்தாமல் இயக்கவும், கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு பாதுகாப்பான முறையில் பாலம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், எதிர்க்கட்சியின் ஆட்சியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதால் அப்படியே விட்டு விட்டீர்களா? எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக பார்க்கக்கூடாது என்று கூறினர். அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: