மன்னார்குடி அருகே அரசு பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புயல் நிவாரண பொருட்கள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

மன்னார்குடி: மன்னார்குடி அருகே அரசு பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புயல் நிவாரண பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீவிபத்து ஏற்பட மின் கசிவு காரணமா என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வடுவூர் அருகில் கருவாக்குறிச்சி ஊராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்ப்பாய் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் அடங்கிய 445  நிவாரண பெட்டிகள், கருவாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை  நிவாரண பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகைமூட்டம் வந்துள்ளது. பின்னர் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. தற்செயலாக அவ்வழியே சென்ற கிராமமக்கள், தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான புயல் நிவாரண பொருட்கள்  முற்றிலும்  தீயில் எரிந்து நாசமாயின. சம்பவ இடத்திற்கு மன்னார்குடி டிஎஸ்பி அசோகன், தாசில்தார் லெட்சுமி பிரபா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று தீப்பிடித்த வகுப்பறையை பார்வையிட்டு விசாரணை  நடத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறை தரப்பில் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்ட கருவாக்குறிச்சி மக்களுக்கு வழங்குவதற்காக 155 நிவாரண பெட்டிகள் வகுப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தீயில் 155 பெட்டிகளும் எரிந்து நாசமாகி விட்டதாக தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என்றனர். தீ விபத்து குறித்து விஏஓ மணிகண்டன், வடுவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா அல்லது சமூக விரோதிகளின் சதிச் செயலா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: