எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா செலவு ரூ.1.45 கோடி இப்போது தர முடியாது: மத்திய அரசு கைவிரிப்பால் சுகாதாரத்துறை திணறல்

மதுரை: மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா செலவு ரூ.1.45 கோடி இப்போது வழங்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை கைவிரித்ததால், மாநில சுகாதாரத்துறைக்கு சிக்கல் எழுந்துள்ளது.மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் 201 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், எய்ம்ஸ்  அடிக்கல் நாட்டுவிழா கடந்த மாதம் 27ம் தேதி மதுரை ரிங்ரோட்டில் மண்டேலா நகரில் நடந்தது. விழா நடந்த 100 மீட்டர் தூரத்தில் பாஜ பொதுக்கூட்டமும் நடந்தது. இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள பிரதமர் மோடி  டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

 அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில சுகாதாரத்துறை செய்தது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழா, கட்சி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் புதர்மண்டி முள்செடிகளாக இருந்தது அந்த இடத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு  சுத்தம் செய்தனர். அரசு விழா அரை மணிநேரம் நடந்தது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள், மருத்துவக் கல்லூரி மாணவிகள் என 800 பேருக்கு மட்டுமே சேர்கள் போடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு தண்ணீர், ஸ்வீட், காரம், காபி,  டீ எதுவும் வழங்கப்படவில்லை. குடிக்கக் கூட தண்ணீரை யாரும் கொண்டு  செல்லக்கூடாது என விழா நுழைவாயிலில் போலீசார் பறித்துக்கொண்டனர். இந்த அரசு நிகழ்ச்சிக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனை  மாநில சுகாதாரத்துறை கணக்கு எழுதி செலவு செய்த பணத்தை தரும்படி மத்திய  சுகாதாரத்துறைக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை மத்திய, மாநில சுகாதாரத்துறை இணைந்து நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடந்தது.  விழாவுக்கான செலவு ரூ.1.45 கோடியை மாநில சுகாதாரத்துறை செய்தது. இதனைக் கேட்டு, மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை, ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி இன்னும்  ஒதுக்கப்படவில்லை. இதனால் தற்போது செலவுக்கான நிதி இல்லை. எய்ம்ஸ்க்கு எப்போது நிதி ஒதுக்கப்படுமோ, அப்போது இந்த செலவு தொகையும் வழங்கப்படும்’ என தெரிவித்துவிட்டது. நிதியை பெறுவதில் சிக்கல்  எழுந்துள்ளது, இதனால் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் செலவு செய்துவிட்டு தற்போது யார் தலையில் நிதியை திணிப்பது என திண்டாடி வருகின்றனர்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: