ஐ.டி ஊழியர்கள், மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் சிக்கினார்: ரூ.6 லட்சம் கேடமைன் பறிமுதல்

துரைப்பாக்கம்: இசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த  நைஜீரியா நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ்காந்தி சாலையில் அதிகமாக ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. வார விடுமுறை  நாட்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகங்கள், பண்ணை வீடுகள் மற்றும் தியேட்டர்களுக்கு சென்று  ஜாலியாக பொழுதுபோக்குவது வழக்கம். இவர்களை குறிவைத்து போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையில் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது நீலாங்கரையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வெளிநாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அவ்வழியாக கார், பைக்குகளில் வருபவர்களிடம் போதை பொருள்  விற்பது தெரிந்தது. அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த இகீசுக்வா (36) என்பதும், காரப்பாக்கம் பகுதி குடியிருப்பில் தங்கி, மேற்கண்ட பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள்  மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்க போதைப் பொருட்கள் விற்பது தெரிந்தது. அவரிடமிருந்து ₹6 லட்சம் மதிப்பிலான கோகைன், கேடமைன் உள்பட பல்வேறு  போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வெளிநாட்டில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்து விற்பனை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: