நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் ராகுல் பிரதமர்: ஸ்டாலின் முதல்வர் ... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உறுதியேற்போம் என்றும் காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி பதவியேற்பு விழாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்கும் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கே.எஸ்.அழகிரியிடம் ெபாறுப்புகளை ஒப்படைத்தார். தொடர்ந்து, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்றார். அவருடன் செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்எல்ஏ, டாக்டர் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் பதவியேற்றனர். விழாவுக்கு மேலிட தலைவர்கள் சஞ்சய் தத், வெல்ல பிரசாத், டாக்டர் பிரசாத், மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், கே.ஆர்.ராமசாமி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், டாக்டர் செல்லக்குமார், குஷ்பு, முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ராணி, கோபண்ணா முன்னிலை வகித்தனர்.

இதில், ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: 50 ஆண்டுகால காங்கிரஸ் தொண்டன் கே.எஸ்.அழகிரிக்கு வாழ்த்து. பஞ்ச பாண்டவர்களாக பதவியேற்ற செயல் தலைவருக்கும் வாழ்த்துக்கள். கே.எஸ்.அழகிரி சாதுவாகத்தான் இருப்பார். சாது மிரண்டால் என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியும். காமராஜர், மூப்பனார், சிவாஜிகணேசன் காலத்தில் பார்த்த எழுச்சியை மீண்டும் நான் இன்று பார்க்கிறேன். சத்திய மூர்த்தி பவன் நிரம்பி வழிகிறது. உணர்ச்சி பெருக்கோடு இருக்கிறீர்கள். வரும் தேர்தலில் 40 தொகுதியையும் வெல்வோம். மோடி பற்றி பேசித்தான் ஆக வேண்டும். ராணுவ தளவாடங்கள் வாங்கும் போது அதன் அமைச்சர்கள்தான் பேரம் பேசுவார்கள்.

ஆனால், பிரதமர் பேரம் பேசியது இப்போதுதான் வெளியே வந்து இருக்கிறது. தமிழகத்தில் 10 இடங்களில் அவர் பேச போகிறாராம். பிரியங்காவை வாரிசு அரசியல் என்கிறார்கள். அந்த குடும்பத்தில் இல்லாத உரிமை யாருக்கு இருக்கிறது. தங்களுடைய சொத்துக்களை எல்லாம் நாட்டுக்காக தாரைவார்த்தது நேரு குடும்பம். அவர்களால்தான் நாம் வளமாக இருக்கிறோம். தொண்டர்களை பழிவாங்கிதான் தலைவர்களாக வருவார்கள். கட்சி தொண்டர்களுக்காக உயிரை விட்ட தலைவர்கள் குடும்பம் எங்காவது இருக்கிறதா?. இது காமராஜர், பெரியார் அமர்ந்த நாற்காலி. 100 சதவீதம் அவருக்கு தகுதி உள்ளது.திமுக கூட்டணியில் நாம் இருக்கிறோம். 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவோம். ராகுலை பிரதமராக்க வேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று உறுதியேற்க தேர்தல் பணியில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், அரும்பாக்கம் வீரபாண்டியன், ரூபி மனோகரன், பொது செயலாளர் சிரஞ்சீவி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரா.மனோகரன், நாசே ராஜேஷ், காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஹசன் ஆரூண், முதன்மை பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.ஜெ.தினகரன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட எஸ்.சி. எஸ்.டி.பிரிவு தலைவர் ஆயிரம்விளக்கு எம்.பி.ரஞ்சன்குமார், சுமதி அன்பரசு, நாஞ்சில் பிரசாத், விக்டரி ஜெயக்குமார், ஜாக்கி, வி.பி.துரை, எஸ்.தீனா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: