அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதியில் ஏஜென்ட்கள் மூலம் பணப்பட்டுவாடா: கட்சியினர் ஷாக்

மதுரை மேற்கு தொகுதியில் 3வது முறையாக அதிமுக வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். தொகுதி மக்களின் கடும் அதிருப்தி காரணமாக, இம்முறை தலைமையிடம் வேறு தொகுதி கேட்டிருந்தார். ஆனால், தலைமை இதே தொகுதியில் சீட் வழங்கியதால் வேறு வழியின்றி களத்தில் உள்ளார். ஏற்கனவே கடந்த பிப்ரவரியில், ஜெயலலிதா பிறந்தநாளுக்காக தொகுதி மக்கள், கட்சிக்காரர்களுக்கு டிபன் பாக்ஸ் கொடுக்க டோக்கன் விநியோகம் செய்திருந்தார். ஆனால், பிப். 26ம் தேதி தேர்தல் தேதி அறிவித்ததால், அதனை பாதியில் நிறுத்திய செல்லூர் ராஜூ, அந்த டோக்கனை தற்போது தொகுதியில் கட்சிக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டோக்கன் அடிப்படையில், ஓட்டுக்கு தலா ரூ.500 வீதம் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.இதற்காக நூறு வாக்காளருக்கு ஒரு கட்சிக்காரர் என நியமித்து, அவர் மூலம், வீடு வீடாக சென்று, ஒரு வீட்டில் எத்தனை ஓட்டு  உள்ளது? அவர்களின் ரேஷன் கார்டு, செல்போன் எண் ஆகியவற்றை கணக்கெடுப்பு நடத்தி விபரத்தினை சேகரித்து கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. வாக்காளருக்கு ஓட்டுக்கான பணம், தங்கள் மூலமே வழங்கப்படும் என கட்சியினர் மிகவும் ஆவலாக இருந்தனர். ஆனால், கட்சியினருக்கு அல்வா கொடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநகராட்சி ஒப்பந்ததாரர்  மூலம் பணம் பட்டுவாடா செய்ய முடிவு செய்துள்ளார். இதன்படி மாநகராட்சி ஒப்பந்ததாரர் மூலம் ஏஜென்ட்கள் பலர் நியமிக்கப்பட்டு, கட்சிக்காரர்கள் கொடுத்த பட்டியலை அவர்களிடம் பிரித்து கொடுத்திருப்பதாகவும், ஒவ்வொரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏஜென்ட்கள் உட்கார்ந்து கொண்டு, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து, வாக்காளர்களை அழைத்து வரும்படியும், உங்களிடம் பணம் தரமாட்டோம் என ஏஜென்ட்கள் கறாராக அதிமுகவினரிடம் கூறி வருவதாக கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர். இதனை சற்றும் ஏதிர்பார்க்காத அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பெயரளாவில் ஒருசிலரை மட்டும், அழைத்து வந்து ரூ.500 வீதம் கவர் வாங்கி கொடுத்துவிட்டு, கண்டுகொள்ளாமல் சென்று விட்டனராம். இதனால், ஏஜென்ட்கள், பல்வேறு இடங்களிலும் வாக்காளருக்கு பணம் கொடுக்க காத்துக்கிடப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுகவினர் சிலரிடம் கேட்டபோது, ‘‘ஒரு ஊரில் யார் கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் என்ற விபரம் எங்களுக்குத்தான் தெரியும். அதன்பேரிலேயே களத்தில் இறங்கி, நாங்கள் புள்ளிவிபரம் சேகரித்து கொடுத்தோம். ஆனால் எங்களை நம்பாமல் ஏஜென்ட்களை நம்பி பட்டுவாடா செய்யப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். துவரிமான், கீழமாத்தூர், கொடிமங்கலம், அச்சம்பத்து, கோச்சடை, தாராபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர் புறக்கணித்ததால், ஏஜென்ட்கள் ஆள் தெரியாமல் ஊரில் சுற்றித்திரிகின்றனர்’’ என்றனர்….

The post அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதியில் ஏஜென்ட்கள் மூலம் பணப்பட்டுவாடா: கட்சியினர் ஷாக் appeared first on Dinakaran.

Related Stories: