காங்கிரசில் ஓஆர்ஓபி என்றால் ஒரே ராகுல்; ஒரே பிரியங்கா : அமித் ஷா கிண்டல்

சிம்லா: ‘‘காங்கிரசை பொறுத்த வரையில் ஓஆர்ஓபி (ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்) ஒரே ராகுல்; ஒரே பிரியங்கா என்று அர்த்தம்’’ என பாஜ தேசிய தலைவர் அமித் ஷா கிண்டலடித்துள்ளார்.பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் (ஓஆர்ஓபி) வேண்டுமென ராணுவ வீரர்கள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். இத்திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு, மத்தியில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றியது. இந்நிலையில், இமாச்சல பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பாஜ கட்சி நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று  பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுக்கும் மேலாக ராணுவ வீரர்கள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜ ஆட்சி அமைந்ததும், முன்னாள் ராணுவ வீரர்கள் நலன் கருதி, உண்மையான உணர்வோடு, ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி, எங்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். காங்கிரசை பொறுத்த வரை ஓஆர்ஓபி என்றால் ஒரே ராகுல்; ஒரே பிரியங்கா மட்டும்தான். வலுவான ஒரு அரசைதான் இந்த நாடு விரும்புகிறது. பலவீனமான, எதற்கும் உதவாத அரசல்ல.

சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் ஏழ்மையை பற்றி பேசுகிறார்.. 70 ஆண்டாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏன் ஏழ்மையை அகற்ற முயற்சிக்கவில்லை. நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் எரிவாயு இணைப்பை கூட அவர்களால் தர முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: