போபால் விஷ வாயு விபத்து பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிதி ... ஏப்ரலில் விசாரணை தொடங்கும்

புதுடெல்லி: போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஏப்ரலில் விசாரணை தொடங்கும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவன தொழிற்சாலையிலிருந்து மீத்தேன் ஐசோசையனைட் விஷ வாயு கசிந்து நகரம் முழுவதும் பரவியது. இதில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.  

உலகின் மிகக்கொடூர விபத்தாக கருதப்படும் இவ்விபத்துக்கு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட யூனியன் கார்பைடு நிறுவனம் ₹715 கோடியை இழப்பீடாக கொடுத்தது. இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் இழப்பீடு கோரியும் பாதிக்கப்பட்ட மக்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர். எனவே, யூனியன் கார்பைடு நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் கூடுதலாக ₹7,844 கோடி இழப்பீடு தொகை  வழங்க உத்தரவிடக் கோரி, கடந்த 2010ல் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த மனுவை விசாரிக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கையெழுத்து மனு உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு இந்த மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்றது. வரும் ஏப்ரல் மாதம் விசாரணை தொடங்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: