வீர மரணம் அடைந்த லான்ஸ் நாயக் நசீர் அகமதுவுக்கு அசோக சக்ரா விருது: அவரது தாய், மனைவியிடம் வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லி: வீர மரணம் அடைந்த லான்ஸ் நாயக் நசீர் அகமதுக்கு அசோக சக்ரா விருதினை நசீர் அகமது வானியின் தாய்மற்றும் மனைவியிடம் குடியரசு தலைவர் வழங்கினார். நாட்டின் 70வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அசோக சகாரா விருதினை வீரமரணம் அடைந்த நாயக் நசீர் அகமது வானியின் தாயிடம் ஒப்படைத்தார். ராணுவத்தில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தொடர்ந்து விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ராணுவத்தில் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது ராணுவ வீரர் நசீர் அகமது வானிக்கு வழங்கப்பட்டது. இவர் காஷ்மீரில் தீவிரவாதியாக இருந்து மனந்திருந்தி ராணுவ வீரராக மாறி வீரமரணம் அடைந்தார்.

லான்ஸ் நாயக் நசீர் அகமது வானி ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஷேகி அஸ்முஜி என்ற கிராமத்தில் வசித்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தீவிரவாத இயக்கத்தில் இருந்தார். பின்னர் மனந்திருந்தி தீவிரவாத அமைப்பில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்றி வந்தார். இவர் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது,6 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். கடந்த ஆண்டு நவம்பரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில், நசீர் அகமது வீர மரணம் அடைந்தார். இந்நிலையில் நசீர் அகமதுவின் உயிர்த்தியாகத்தை  போற்றும் வகையில், அவருக்கு அசோக சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை, அவரது தாய் மற்றும் மனைவியிடம் வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: