தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாட்டம் : 67,664 வாக்குச்சாவடிகளில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு வருடமும் (2011ம் ஆண்டு முதல்) கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 25ம் நாளை ஒன்பதாவது தேசிய வாக்காளர் தினமாக மாநிலமெங்கும் நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டின் மைய நோக்கு ‘எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது’ என்பதாகும்.  

தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும்,  மாவட்ட அளவிலும் மற்றும் 67,664 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அனைத்து 29,988 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாநில அளவிலான விழா  தமிழக  தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில்  25ம் தேதி (இன்று) காலை 11 மணியளவில் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில்  நடைபெறும்.

விழாவில், தலைமைத் தேர்தல் அதிகாரி தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்கவைத்து, சிறப்புரையாற்றுவார்.மேலும், அக்டோபர் மாதம் மாநில அளவில் நடந்த தேர்தல் விழிப்புணர்வுப் போட்டி 2018ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவார்.

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்.வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்றலின் முக்கியத்துவத்தையும் அதில் இளைஞர்களின் பங்கையும், ‘எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது’ என்னும் இவ்வாண்டின் தேசிய வாக்காளர் தின மையக்கருத்தை உணர்த்தும் வகையில் விழாவில் பள்ளிச் சிறார்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.  இதேபோல் மாவட்ட அளவிலான விழாக்களிலும் வாக்குச் சாவடி நிலையிலான விழாக்களிலும் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழியினை வாக்காளர்கள் ஏற்பர். மேலும்,  ஜனவரி 25ம் தேதி (இன்று) 11 மணியளவில் அரசு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும்.

இதேபோல் 26ம் தேதி நடைபெறவிருக்கும் கிராம சபைக்கூட்டங்களில் வாக்காளர் உறுதிமொழி  ஏற்கப்படும்.  சென்னையில் நடைபெறவுள்ள  இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் பேரணியில் ‘எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது’ என்னும் மையநோக்கின் அடிப்படை குறித்த ஓர் அலங்கார  ஊர்தியும் இடம் பெறும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: