ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவர் தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது.  ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி  சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மாணவர் கோகுல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக வந்த தகவல் பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

 வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு வர உள்ளது. எனவே இந்த சமயத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுத்தேர்விற்காக எங்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் பாதிப்பு ஏற்படும். தற்போது, 11ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண் முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த போராட்டத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக உத்தரவாதம் அளித்திருக்கிறது. எனவே, மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அதற்கு அனுமதி அளித்து வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி மாணவர் கோகுல் நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள் நாளை விசாரிப்பதாக தெரிவித்தனர். வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: