தமிழக டிஜிபியின் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை விதிக்க மதுரை கிளை மறுப்பு

மதுரை: தமிழக டிஜிபியின் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கில், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக, மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதின்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு, டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், அவரது பணி நீட்டிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். குட்கா முறைகேடு தொடர்பாக, சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் போய் சேரவில்லை என்று கூறி, பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அதேசமயம், இவ்வழக்கில் டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் வரும் 29-ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய  தினம், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: