அமராவதி அணை நீர்மட்டம் குறைவு : 2ம் போகம் நெல் பயிரிட கல்லாபுரம் விவசாயிகள் தயக்கம்

உடுமலை: அமராவதி அணை நீர்மட்டம் குறைவாக உள்ளதால் 2ம் போகம் நெல் பயிரிட கல்லாபுரம் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பகுதி நேரடி பாசனம் பெறுகிறது. இப்பகுதியில் சுமார் 3500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. பெரும்பாலும் நெல் பயிரிடுகின்றனர். கடந்த ஆண்டு அமராவதி அணை நிரம்பியதையடுத்து, விவசாயிகள் முதல்போகம் நெல் பயிரிட்டனர். கடந்த டிசம்பரில் அறுவடை நிறைவடைந்தது. இதையடுத்து, 2ம் போக நெல் சாகுபடிக்காக நாற்றுகளை பாத்தி கட்டி வைத்துள்ளனர். ஆனால் நடவு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: அமராவதி அணையில் 90 அடிக்கு தற்போது 57 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 90 நாட்கள் தடையின்றி தண்ணீர் கிடைத்தால்தான், நெல் சாகுபடி முழுமை பெறும். கோடை துவங்க உள்ளதால் குடிநீருக்காக அதிகளவு தண்ணீர் திறக்கப்படும். மேலும் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. நீர் வரத்தும் குறைவாகவே உள்ளது. இனி பருவ மழைக்கு வாய்ப்பில்லை. தண்ணீர் கிடைக்காவிட்டால் நஷ்டம் ஏற்படும் என்பதால் தயக்கமாக உள்ளது. முதல் போக நெல் சாகுபடியின்போது, தண்ணீர் போதுமான அளவு இருந்தும் கூட நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு 5 மூட்டை நெல் குறைவாகவே கிடைத்தது. எனவே, 2ம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயங்குகின்றனர். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: