நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு பிப்ரவரி 10, 19ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி பிப்ரவரி 10, 19ம்தேதிகளில் தமிழகம் வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 3 மாநிலங்களை காங்கிரஸ் தன் வசப்படுத்தியது. இந்த மாநிலங்களில் இதுவரை பாஜ ஆதிக்கம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. வட மாநிலங்களை நம்பி இருக்கும் பாஜவுக்கு இந்த தேர்தல், அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இதனால் பாஜக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. வட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் கால் பதிக்கும் வேலையில் பாஜ தலைமை இறங்கியுள்ளது.

 இதற்காக, மத்திய அமைச்சர்கள், பாஜ மேலிட நிர்வாகிகள் பலர் தென்மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார். தமிழக நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் பேசி கட்சி பணிகளை தீவிரப்படுத்தி பாஜவை வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.

  மேலும் தமிழகத்தில் காலூன்றும் வகையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கையில் பாஜ தலைமை இறங்கியுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் பிரச்சார பயணத்தை இப்போதே வெளியிட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதாவது, வரும் 27ம்தேதி மதுரையில் 1300 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வருகிறார். மேலும் பல்வேறு மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

 அன்று இரவு மதுரையில் தமிழக பாஜ சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அவரது வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழிசை கூறி வருகிறார். இதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய பிப்ரவரி 10 மற்றும் 19ம்தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருவதை பாஜகவினர் உறுதி செய்துள்ளனர். தேதி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆனால் அவரது பிரச்சார பயண விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சென்னை, கோவை, திருச்சி, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதில் ஏதாவது இரண்டு இடங்களில் மோடி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழக பாஜகவினர் கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் தொடர் வருகை தமிழக பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: