தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின்கீழ் புத்தொழில் புத்தாக்கக் கொள்கை - 2023: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் புத்தொழில் புத்தாக்கக் கொள்கையை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் - 2023 கீழ் தொழில்களை வளர்க்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்கக் கொள்கை 2018-2023 என்ற கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் இறையன்பு, கூடுதல் இயக்குநர் ஷஜீவானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தொழில் புத்தாக்க கொள்கை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தொழில்நுட்பத்தின் மூலமாக புத்தாக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதே இந்த கொள்கையின் நோக்கமாகும். தமிழ்நாட்டை இந்தியாவின் மிகப்பெரிய ‘அறிவுசார் மூலதனம்’ மற்றும் ‘கண்டுப்பிடிப்புகளின் மையம்’ ஆக உருவாகுவதற்கு இக்கொள்கை வழிவகை செய்யும். புத்தொழில்களை உருவாக்கி மேம்படுத்த ‘தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்’ மாநில ‘ஒருங்கிணைப்பு முகமையாக’ இயங்கும்.

இதன் கீழ் ஒரு முழுநேர அலுவலர் தலைமையில் ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஏற்படுத்தப்படும். மாநில தலைமைச் செயலாளர் தலைமையில், ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக்குழு’ உருவாக்கப்பட்டு, உயர் அலுவலர்கள், பங்குதாரர்கள், புத்தொழில் முதலீட்டாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் காப்பகங்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இந்த குழுவானது புத்தொழில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018 - 2023 திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: