சினிமாவை போல் இந்தியாவும் மாற்றங்களை சந்திக்கிறது மும்பை விழாவில் பிரதமர் மோடி பேச்சு

மும்பை: ‘‘சினிமாவை போல் இந்தியாவும் மாற்றங்களை சந்தித்து வருகிறது’’ என மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திரமோடி நேற்று மும்பையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

திரைப்படங்களும், சமுதாயமும் ஒன்றையொன்று பிரதிபலிக்கிறது. சினிமாவை போன்று இந்தியாவும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. சொந்தமாக தீர்வுகளையும் கண்டு கொள்கிறது. நாட்டில் லட்சக்கணக்கான பிரச்னைகள் இருக்கிறது. அதேசமயம் அதற்கு கோடிக்கணக்கான தீர்வுகளும் இருக்கிறது.

இந்திய சமுதாயத்தில் சினிமா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய போது, இந்திய சினிமா வெளிநாடுகளிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொண்டேன். இந்தியாவில் சினிமா படங்கள் திருட்டு சி.டி.க்களாக வெளியிடப்படுகின்றன. இன்டெர்நெட்டுகளிலும் வெளியிடப்படுகிறது. இதனை தடுக்க  அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க ஒற்றை சாளர முறை அமல் செய்யப்படும். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடத்தப்படுகிறது. அதே போல இந்தியாவில் உலக சினிமா மாநாடு நடத்தப்பட வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்கும் சினிமா பெரிதும் உதவுகிறது. சுற்றுலா வளர்ச்சி ஏழை மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. சுற்றுலா வளர்ச்சியால் டீ விற்பவரும் பணம் சம்பாதிக்க முடிகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: