மதுரையில் 100 ஆண்டுகளை கடந்த பெரியார் பஸ் ஸ்டாண்ட் இன்று மூடல்

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமயமாகிறது

* பஸ்களை நிறுத்த மாற்று இடங்கள் ஏற்பாடு

மதுரை: நூறு ஆண்டுகளை கடந்த  மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனப்படுத்தும் பணிக்காக இன்று மூடப்படுகிறது. மதுரையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ‘மீனாட்சி நிலையம்’ என்ற பெயரில் பஸ் ஸ்டாண்ட் திடீர் நகர் பகுதியில் இயங்கியது. பின்னர் நகர வளர்ச்சிக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்ைக அதிகரித்தது. பின்னர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் என அழைக்கப்பட்டது. 1971க்கு பிறகு இந்த பஸ் ஸ்டாண்ட், பெரியார் பஸ் ஸ்டாண்ட் என மாற்றப்பட்டது. அரசு விரைவு பஸ்கள் இதனருகில் திருவள்ளுவர் நிலையம் என்ற பெயரில் இயங்கின.1982ல் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டு, திருச்சி, தஞ்சை, காரைக்குடி போன்ற வெளியூர் பஸ்கள் இங்கு மாற்றம் செய்யப்பட்டன. 1998ல் ஆரப்பாளையம், பழங்காநத்தத்தில் பஸ் ஸ்டாண்ட்கள் உருவாக்கப்பட்டு விருதுநகர், நெல்லை பஸ்கள் பழங்காநத்தத்திற்கும், தேனி, திண்டுக்கல் பஸ்கள் ஆரப்பாளையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டன.1999ல் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு பழங்காநத்தம், அண்ணா பஸ் ஸ்டாண்ட்கள் மூடப்பட்டு மாட்டுத்தாவணியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் பெரியார் பஸ் ஸ்டாண்ட் மட்டும் நூறாண்டுகளாக தொடர்ந்து இயங்கி சாதனை படைத்து வந்தது. இங்கு நகர பஸ்கள் மட்டும் பெரியார் மற்றும் அருகாமையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்டு, தற்போது காலியாக இருக்கிறது.

ரூ.159 கோடியில் நவீனம்: இந்த சூழலில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் மீனாட்சியம்மன் கோயில் இருப்பதால், நெருக்கடி குறைக்க வேண்டிய கட்டாயம் மற்றும் நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட்களை இணைத்து நவீனமயமாக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து சுற்றிலும் 1,300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்கள், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு நவீனமாக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால் இந்த பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவள்ளுவர்  பஸ் ஸ்டாண்ட் பகுதிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ந்துள்ளது. ரூ.159 கோடியில் நவீனப்படுத்தவும், இப்பணியை 18 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 4 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அடுக்குமாடி வாகன ஸ்டாண்ட்டும் அமைகிறது.446 கடைகள் காலி: பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் மாதிரியில் உருவாக்கப்படும் இந்த பஸ் ஸ்டாண்டின் மையத்தில் மேல்பாலம் அமைகிறது. பல்வேறு பகுதிகளின் பஸ்கள் இந்த பாலத்தின் வழியாக உள்ளே நுழைந்து, பாலத்தின் மற்றொரு வழியாக வெளியேறும் விதம் கட்டப்படுகிறது. மாநகராட்சி கட்டுமானத்திற்கான வரைபடங்களை தயாரித்துள்ளன.  பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்களில் உள்ள 446 கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இந்த பெரியார், ஷாப்பிங் காம்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இன்று முதல் மூடப்படுகிறது.  தொடர்ந்து நவீனமயமாக்கும் பணி தொடங்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (ஜன. 19ல்) அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: