கூட்டணியில் பாஜவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு : தம்பிதுரைக்கு எம்பி, எம்எல்ஏக்கள் ஆதரவு

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜவை சேர்க்கக்கூடாது என தம்பிதுரை எம்பி தொடர்ந்து எதிர்த்தும் பொது அரங்கில் பேசியும் வருகிறார். அதையும் மீறி சேர்த்தால், கட்சியை உடைக்கவும் அவர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் வர உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றால்தான் கணிசமான ஓட்டுக்களை பெற முடியும் என்ற நிலைதான் தற்போது தமிழகத்தில் பாஜவுக்கு உள்ளது. இதனால்தான், கடந்த வாரம் பிரதமர் மோடி, தமிழக பாஜ நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசும்போது தமிழகத்தில் பழைய நண்பர்கள் பாஜவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதிமுகவை குறிவைத்தே பிரதமர் மோடி அப்படி பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் எக்காரணத்தை கொண்டும் பாஜவுடன் கூட்டணி சேரக்கூடாது என்று அதிமுகவில் உள்ள முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கடுமையாக எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் பாஜவுக்கு மக்கள் செல்வாக்கு கொஞ்சம்கூட இல்லை. அதிமுக முதுகில் சவாரி செய்து தமிழகத்தில் பாஜ காலூன்ற திட்டமிட்டு வருகிறது. அதனால்தான், தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சிக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருகிறது என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மேலும், கடந்த மாதம் மக்களவையில் ரபேல் போர் விமானம் வாங்குவது பற்றிய விவாதத்தில் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, பாஜவை கடுமையாக விமர்சனம் செய்தார். போர் விமானம் வாங்க அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதேபோன்று, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரும் மசோதாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் கருத்தை பதிவு செய்தார். அதேபோல கஜா புயல் நிவாரணத்திலும் மத்திய அரசை குற்றம்சாட்டி பேசியிருந்தார்.

இப்படி, பாஜவுக்கு எதிராக மக்களவையிலும், வெளியிலும் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார். இதற்கு, அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் தம்பிதுரைக்கு நேரிடையாக ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.தம்பிதுரை பாஜவை தொடர்ந்து எதிர்த்து வரும் சம்பவம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இன்றைய சூழலில் மத்திய அரசின் தயவில்தான் ஆளுங்கட்சி செயல்படுகிறது. எனவே, தம்பிதுரையின் பேச்சு பாஜவுடனான கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த சம்பவத்தால் அதிமுக எம்பி தம்பிதுரை கடந்த இரண்டு மாதமாக சென்னைக்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார். முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நடைபெறும் எம்பிக்கள் கூட்டம், கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் எதிலும் தம்பிதுரை பங்கேற்பது இல்லை. கரூர் எம்பியான தம்பிதுரை, நேரடியாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தொகுதிக்கு காரில் சென்று விடுகிறார். இப்படி கட்சி தலைமையை புறக்கணித்து தம்பிதுரை தனியாக அதிமுகவில் செயல்படுவதால், தேர்தல் சமயத்தில் இவரது தலைமையில் தனி அணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னணி தலைவர்கள் கருதுவதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரால் அதிமுக உடையும் ஆபத்து இருப்பதை மறுப்பதற்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: