மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி - மார்க்சிஸ்ட் நிபந்தனை

கொல்கத்தா: ‘‘காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மாநில அளவில் இருந்து தொடங்கப்பட வேண்டும். தேசிய அளவில் அதற்கு சாத்தியமில்லை’’ என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.மக்களவை தேர்தலுக்காக தேசிய அளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆளும் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியிடம், ‘‘பாஜவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க காங்கிரசுடன், மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை ஏன்?’’ என கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு யெச்சூரி, ‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் சூழல் வெவ்வேறாக உள்ளது. எனவே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மாநில அளவில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இப்போதைக்கு தேசிய அளவிலான கூட்டணிக்கு வாய்ப்பில்லை. மக்களவை தேர்தல் முடிவு அறிவிப்புக்குப் பிறகு, பாஜ.வுக்கு எதிரான மதச்சார்பற்ற, ஜனநாயக முன்னணி அமையும் என எதிர்பார்க்கிறேன்.   உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி வரவேற்கத்தக்கது. இதுபோன்று இன்னும் பல கூட்டணிகள் உருவாகும்’’ என்றார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜவை வீழ்த்த மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: