2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை சட்ட ஆலோசகர்கள் இல்லாததால் தடுமாறும் பொதுப்பணித்துறை: பல்வேறு திட்டப்பணிகளை தொடங்க முடியாமல் தவிப்பு

சென்னை: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பொதுப்பணித்துறையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளம் ஆகிய 2 பிரிவுகள் உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான புதிய கட்டிடங்களை கட்டுவது, ஏரி, அணைகளை புனரமைப்பு, புதிய அணைகட்டுகள்  கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு ₹4 ஆயிரம் கோடி சட்டசபை கூட்ட தொடரில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்ளுக்கு  உடனடியாக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதிகளை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடுவதற்கு முன்பு, புதிதாக கட்டிடங்களுக்கான இடம், புதிய நீர்த்தேக்கம், கால்வாய் அமைப்பது  உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும். அவ்வாறு நிலங்களை கையகப்படுத்த முயலும் போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருகின்றனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக  நடந்து வருகிறது. இதனால், அந்த திட்ட பணிகளுக்கும் நிதி ஒதுக்கியும் அவற்றை உடனடியாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை முடிக்க முடியாத காரணத்தால், அந்த திட்ட பணிகளை தொடங்க முடியாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டத்துறையில் பணியாற்றும் பிரிவு அலுவலர்கள் நிலையில்  உள்ளவர்களை தலைமை பொறியாளர் மண்டலங்களில் சட்ட ஆலோசகர்களாக பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், தற்போது வரை அதற்கான நடவடிக்கை பொதுப்பணித்துறை தலைமை எடுக்கவில்லை.  இதனால், அனைத்து வழக்குகளையும் உரிய முறையில் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நீர்வளத்துறையில் பல்வேறு திட்ட பணிகள் வழக்குகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறையில் சென்னை, திருச்சி,  கோவை, மதுரை மண்டலங்களில்  அரசு சட்டத்துறையில் பணியாற்றும் பிரிவு அலுவலர்கள் நிலையில் உள்ளவர்களை சட்ட ஆலோகர்களாக நியமித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை தற்போது வரை  எடுக்கப்படவில்லை. தற்போது வரை வழக்குகளுக்காக மண்டல தலைமை பொறியாளர்கள் சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் அரசு வழக்கறிஞர்களை ஆலோசித்து அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.  பொதுப்பணித்துறையில் சட்ட ஆலோசகர் நியமித்திருந்தால், அவரே அனைத்து வழக்குகளையும் கவனித்திருப்பார்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: