குஜிலியம்பாறையில் பாலித்தீன் பைகள் பயன்பாடு தாராளம்

* கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை கடைகளில் பாலித்தீன் பை பயன்பாடு தாராளமாக உள்ளது. இவற்றை பறிமுதல் செய்ய பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். தமிழகத்தில் ஜன.1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்களில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், அங்கு பயன்பாட்டில் இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில், பாலித்தீன் பயன்பாட்டால் ஏற்படும் கேடு குறித்து பள்ளி, கல்லூரி, அரசுத்துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே பாலித்தீன் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டும், அதற்கு தடை விதித்தும், தடை மீறி பாலித்தீன் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து கலெக்டர் வினய் அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் மாவட்டம் முழுவதும் பாலித்தீன் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் குஜிலியம்பாறையில் உள்ள மளிகைக் கடை, ஓட்டல், டீக்கடை, பெட்டிக்கடைகள் மற்றும் இதர கடைகள் அனைத்திலும் பாலித்தீன் பை பயன்பாடு அதிகளவில் உள்ளது. கடைகளில் பாலித்தீன் பை பயன்பாடு குறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பாலித்தீன் தடை அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரை, பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு கடைகளுக்கும் நேரடியாக சென்று பாலித்தீன் பை பறிமுதல் செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.

‘போஸ்’ கொடுக்கும் அதிகாரிகள்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பாலித்தீன் ஒழிப்பு குறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கடைகளில் பாலித்தீன் தடை என வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தொங்கவிட்டும், பாலித்தீன் பறிமுதல் செய்வது போல் போட்டோவிற்கு போஸ் கொடுத்து மாவட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கொடுத்து விடுகின்றனர். எனவே மாவட்டத்தின் பிற பகுதிகளில் பணியாற்றும் அலுவலர்களை கொண்டு, குஜிலியம்பாறையில் உள்ள அனைத்து கடைகளிலும் அதிரடி ரெய்டு நடத்தி பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதித்தும் மாவட்ட கலெக்டர் வினய் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: