ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழு தனது அறிக்கையை முதல்வரிடம் நேற்று அளித்தது. இதையடுத்து தமிழக அரசு நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள பிரச்னையில் நாளை என்ன கூறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு 1-1-2016 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தாலும், 21 மாதம் நிலுவைத்தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் தலைமையில் விசாரணை நடத்த கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக அரசு குழு அமைத்தது. இந்த கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த குழுவிடம் 7 அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும் 100-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சார்பாகவும் தனி நபர்கள் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். இதில் பெரும்பாலான மனுக்கள் ஆசிரியர் சங்கத்தினரே வழங்கினர். இந்த ஆணையம் அமைக்கப்பட்டபோது ஜூலை வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் டிசம்பர் வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. கோரிக்கை மனுக்கள் துறை ரீதியாக பிரிக்கப்பட்டு பின்னர் மனு அளித்த சங்கங்களின் உறுப்பினர்களை நேரில் அழைத்து கருத்து கேட்கப்பட்டது. இதன்மூலம் கிடைக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அறிக்கை தயாரிக்கும்  பணி நிறைவடைந்ததையொட்டி, சித்திக் தலைமையிலான குழு நேற்று தனது அறிக்கையை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: