மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்கக்கூடாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல்

புதுடெல்லி: மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனையடுத்து மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி, அதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மான நகல் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இம்மனு மீது முடிவெடுக்கும் வரை, அணை கட்டும் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த சூழலில், மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு 20 பக்க மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை ஏற்கனவே வழங்கியுள்ளது என கர்நாடக அரசு கூறியுள்ளது.

மேலும், அந்த தீர்ப்பினை மீறும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஒருபோதும் விசாரிக்க கூடாது. தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் வழங்காமல் அச்சத்தின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனுவில், நிறைய பிழைகள் உள்ளன, நிறைய பொய்யான விஷயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ன. இந்த மனு மூலம் லாவகமாக முடிந்து போன காவிரி வழக்கை மீண்டும் துவக்க தமிழக அரசு முயல்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும் என்றும், கர்நாடக அரசு தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: