மேகதாது அணை விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பி.க்கள் சஸ்பெண்ட்: மக்களவை, மாநிலங்களவையில் அதிரடி

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் 24 அதிமுக எம்பி.க்கள் 5 நாட்களுக்கும், மாநிலங்களவையில்  திமுக எம்பி.க்கள் உட்பட 12 பேர் ஒரு நாளைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள மத்திய நீர்வளத்துறை, கர்நாடக அரசுக்கு அனுமதி  வழங்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தி,  நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக எம்பி.க்களை சமாதானப்படுத்த, விரைவில் இரு மாநில முதல்வர்களை அழைத்து  ஆலோசனை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், புத்தாண்டு விடுமுறைக்குப் பின் நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியதும், மேகதாது விவகாரத்தை எழுப்பி மக்களவையில் அதிமுக எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், காலை 11 மணி வரை அவை  ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு அவை கூடியபோது, அதிமுக எம்பி.க்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சிலர் அவை குறிப்பு காகிதங்களை கிழித்து வீசி எறிந்தனர்.  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பலமுறை எச்சரித்தும், அவர்கள் கோஷமிட்டபடியே இருந்தனர்.இதனால், அவை விதிமுறையை மீறி மையப்பகுதியை முற்றுகையிட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக மக்களவை விதி எண் 374 ஏ-ன் கீழ் அதிமுக எம்பி.க்கள் 24 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர்  சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். எனவே, 24 அதிமுக எம்பி.க்களும் அடுத்த 5 அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல், மாநிலங்களவையிலும் திமுக, அதிமுக எம்பி.க்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டனர். காலையில் அவை தொடங்கியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு 2 முறை  அவையை ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் கூடியபோது, அதிமுக எம்பி.க்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, ‘‘எங்களுக்கு நீதி வேண்டும். மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.  தமிழகத்தின் உரிமைகளை மறுக்கக் கூடாது’’ என கோஷமிட்டனர். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை அவமதிப்பதாகவும் அவர்கள் கோஷமிட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக எம்பி.க்களும்  அமளியில் ஈடுபட்டனர்.

மேகதாது விவகாரம் தொடர்பாக நிதின் கட்கரி பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், அவையை நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல் கேட்டுக் கொண்டார். அதை ஏற்க  மறுத்த தமிழக எம்பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டபடி இருந்தனர். இதனால், திமுகவின் 4 எம்பி.க்கள் உட்பட 12 பேரை அவையிலிருந்து நேற்று ஒரு நாளைக்கு வெளியேற, விதி 255ன் கீழ் வெங்கையா நாயுடு உத்தரவு  பிறப்பித்தார். பின்னர், அவையை ஒத்திவைத்தார்.அதன் பிறகும் அவையிலிருந்து தமிழக எம்பி.க்கள் வெளியேறாமல் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

5 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்

மக்களவையில் அதிமுக.வுக்கு மொத்தம் 37 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அசோக் குமார், ஆர்.கே. பாரதி மோகன், கே.காமராஜ், சந்திரகாசி, ஜெயகுமார் ஜெயவர்தன், பரசுராமன், பி.குமார், வசந்தி, மகேந்திரன், மரகதம்,  நாகராஜன் உள்ளிட்ட 24 எம்பி.க்கள் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: