ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரை சந்தித்த அமெரிக்க வாலிபரிடம் 3வது நாளாக விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினரை சந்தித்து திரும்பிய அமெரிக்க வாலிபரிடம் 3வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கடந்த சில நாட்களாக அமெரிக்க வாலிபர் ஒருவர் தங்கியுள்ளார். இவர் தங்கியிருந்த நாட்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், கூட்டமைப்பினரை சந்தித்து  பேசியுள்ளார். மேலும் மீளவிட்டான், பண்டாரம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று திரும்பியுள்ளார்.நேற்று இவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த வாலிபர், தனது பைக்கில் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பலரை பேட்டி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த  போலீசார், கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த நபர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த குறும்பட இயக்குனர் மற்றும் ப்ரிலான்ஸ் எழுத்தாளர் மார்க் ஷில்லா என்பதும், ட்ரான்ஸ்  குளோபல் மீடியா என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. கடந்த 26ம் தேதி தென்னிந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் இவர் வந்துள்ளதும் தெரிந்தது.

இதுகுறித்து போலீசார், அவரிடம் நேற்று காலை முதல் மாலை வரை 3வது நாளாக விசாரணை நடத்தினர். அவர் தொடர்பான சில ஆவணங்களை சரிபார்க்க குடியுரிமை பிரிவின் உதவியை நாடியுள்ளனர். இதனிடையே  அவரது வருகை மற்றும் விசா தொடர்பான காரணங்கள் மற்றும் அவர் இங்கு டூரிஸ்ட் விசாவில் வந்து மேற்கொண்ட வேலைகள் குறித்த தெளிவான அறிக்கையை போலீசார் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்து  விசாரித்து வருகின்றனர்.அவர், விசா விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததால் போலீசார், உளவுத்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் தூதரக அதிகாரிகளின் அறிக்கை மற்றும் தகவல்களை  பொறுத்து இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு உள்ளிட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே மார்க் தங்கியுள்ள விடுதியில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மார்க்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: