‘தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்யவில்லை’ முதல்வருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜ எம்எல்ஏ: ஆந்திர அரசியலில் பரபரப்பு

திருமலை: தனது தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யாததால், பாஜ எம்எல்ஏ மாணிக்யாலராவ் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லிக்கூடம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்யாலராவ். பாஜ எம்எல்ஏவான இவர், சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில்  அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.  கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாஜ, தெலுங்கு தேச கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி முறிவு காரணமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் மாணிக்யாலராவ், ‘தாடேபல்லிக்கூடம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. நீளமான கடற்கரை கொண்ட மாவட்டமாக உள்ள மேற்கு கோதாவரியில்  மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால் இந்த பகுதியில் ஒரு துறைமுகம், விமான நிலையம், பல்கலைக்கழகம் போன்றவற்றை அமைக்க முதல்வர் முன்வரவில்லை. அமைச்சராக இருந்தபோது முதல்வருக்கு அழுத்தம்  கொடுத்து பல்வேறு பணிகளுக்கு   அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு பணியையும் அரசு செய்யவில்லை’ எனக்கூறி கடந்த மாதம் 28ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது கோரிக்கைகளை ஒரு  மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அரசு இதை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் எம்எல்ஏ மாணிக்யால ராவ், நேற்று முன்தினம் முதல்வருக்கு தனது ராஜினாமா கடிதத்தை  அனுப்பினார்.

அதில் ‘எனது தொகுதியில் அரசு நிறைவேற்றுவதாக கூறி வெளியிடப்பட்ட 54 பணிகளையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். 15 நாட்களுக்குள் இந்த திட்டங்களை செயல்படுத்தாத பட்சத்தில் முதல்வர், என்னுடைய  ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்’ என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அடுத்த மாதம் ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினர், பிரதமர் மோடியின் வருகையை கண்டித்தும், மாநில அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்து  விட்டதாகவும், திட்டங்கள் ஒன்றைக்கூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மீது பாஜ எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்

பாஜ எம்எல்ஏ.வின் ராஜினாமா மிரட்டல் தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘`தாடேபல்லிக்கூட எம்எல்ஏ மாணிக்யாலராவ் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி வருகிறார். அவரது சொந்த மாவட்டமான மேற்கு  கோதாவரி மாவட்டத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய போலவரம் அணை கட்டப்பட்டு வருகிறது. இதற்கும், மத்திய அரசு நிறுவனமான என்ஐடிக்கு நிதி ஒதுக்காமலும் மாநில பிரிவினை மசோதாவில் தெரிவித்தவற்றை மத்திய அரசு  வழங்காமலும் இருந்து வருகிறது. இதை கண்டித்து டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தால் எந்த பயனும் இல்லை.  என்னை மிரட்டவும், மக்களை திசை  திருப்பவும் போலியாக உண்ணாவிரதம் இருந்தாலும் ராஜினாமா செய்வதாக அறிவித்தாலும் அதற்காக நான் பயப்படமாட்டேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: