மெல்போர்னில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி ஆல் ரவுண்டர் ஹர்திக் தயார்: அஷ்வின் சந்தேகம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்காக, இந்திய அணி வீரர்கள் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அடுத்து பெர்த் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில், 287 ரன் இலக்கை துரத்திய இந்தியா 140 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.இந்த நிலையில், 3வது போட்டி பாரம்பரியம் மிக்க ‘பாக்சிங் டே’ டெஸ்டாக மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிரமாக பயிற்சி செய்தனர். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரஞ்சி போட்டியில் விளையாடி உடல்தகுதியை நிரூபித்த நிலையில் அவசரமாக ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப்பட்டார்.தற்போது முழு உடல்தகுதியுடன் உள்ள அவர், நேற்று நடந்த வலைப்பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்றார். மெல்போர்ன் டெஸ்டில் ஹர்திக் களமிறங்குவது உறுதியாகிவிட்ட நிலையில், தொடக்க வீரர்களை தேர்வு செய்வதே இந்திய அணி நிர்வாகத்துக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது.

முரளி விஜய், லோகேஷ் ராகுல் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அடிலெய்டு மற்றும் பெர்த் டெஸ்டில் கணிசமாக ரன் குவிக்கத் தவறியது அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துவிட்டது.

குறிப்பாக, ராகுல் பார்மில் இல்லாதது கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவரை மாற்ற வேண்டும் என்று முன்னாள் பிரபலங்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள மயாங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முரளி விஜயுடன் இணைந்து அகர்வால் இன்னிங்சை தொடங்கலாம்.அதே சமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் அவர் களமிறங்குவது சந்தேகமாகவே உள்ளது. இது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘அஷ்வின் முழு உடல்தகுதி பெற குறைந்த அவகாசமே உள்ளது. அவர் விளையாடுவது பற்றி கடைசி நேரத்தில் தான் முடிவு செய்வோம். இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் கூட தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். வலைப் பயிற்சியின்போது எந்தவித சிரமமும் இல்லாமல் அவர் செயல்பட்டது திருப்தியாக இருந்தது. பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் 70 சதவீத அளவுக்கு தயாராக இருந்தாலும், நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தற்போது 80 சதவீதம் தயார் என்றாலும் விளையாட வைக்கலாம் என நினைக்கிறோம். எனினும், ஜடேஜாவின் உடல்தகுதி பற்றியும் தீவிரமாக ஆலோசித்த பின்னரே முடிவு செய்வோம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: