தலைமை பொறுப்பில் தவறிவிட்டேன்... : ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

தென் ஆப்ரிக்காவுடன் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின்போது உப்புக்காகிதத்தை உபயோகித்து பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரான் பேங்க்ராப்ட் ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர். தங்கள் தவறை அவர்கள் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, பேங்க்ராப்டுக்கி 9 மாத தடையும், மற்ற இருவருக்கு ஓராண்டும் தடை விதிக்கப்பட்டது. கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மித் கூறியதாவது: வீரர்கள் அறையில் இதற்கான திட்டம் தயாரானபோது அதை தடுத்து நிறுத்தும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதே நான் செய்த மிகப் பெரிய தவறு. ஒரு கேப்டனாக எனது கடமையில் இருந்து தவறிவிட்டேன்.

அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். எனக்கு தெரிந்து ஆஸி. வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது அது தான் முதல் முறை. மற்ற அணிகள் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. பந்து நன்றாக ஸ்விங் ஆக வேண்டும் என எல்லோருமே விரும்புவோம். அதற்காக எது செய்தாலும் விதிமுறைகளுக்குட்பட்டு இருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்ந்துவிட்டேன். தடை விதிக்கப்பட்டபோது எதிர்காலமே இருண்டுவிட்டது போல இருந்தது. தற்போது அதில் இருந்து மீண்டுவிட்டேன். உலக கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஸ்மித் கூறியுள்ளார். பேங்க்ராப்டுக்கு விதிக்கப்பட்ட தடை டிச. 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவர் பிக் பாஷ் டி20ல் களமிறங்கத் தயாராகி வருகிறார். ஸ்மித், வார்னர் இருவரும் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: