பெண் சீடர் பாலியல் புகார் வழக்கு நித்யானந்தா ஜன.3ம் தேதி ஆஜராகாவிட்டால் நடவடிக்கை: வக்கீலுக்கு நீதிபதி எச்சரிக்கை

 பெங்களூரு:   நித்யானந்தாவை ஜன.3ம் தேதி ஆஜர்படுத்தாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று அவரது  வக்கீலுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெங்களூருவை  அடுத்த ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா.  சமீபத்தில் அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டதாக பரபரப்பு தகவல்  வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே  ஆரத்திராவ் என்ற பெண் சீடர்  நித்யானந்தா மீது அளித்த பாலியல் புகார் வழக்கு  விசாரணை பெங்களூரு ஊரகம்  ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தாவை  நேரில் ஆஜராகும்படி பல முறை  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால்,  இதுவரை நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் மீண்டும்  நேற்று இந்த வழக்கு நீதிபதி கோகுல்ராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நித்தியானந்தாவின் வக்கீலை பார்த்து  நீதிபதி சரமாரியாக கேள்வி  எழுப்பினார். குறிப்பாக நித்யானந்தாவை ஏன் நேரில் அழைத்து வந்து  ஆஜர்படுத்தவில்லை என்று கேட்டார். அதற்கு நித்யானந்தாவின் வக்கீல், அவர்  வழக்கம்போல ஆன்மிக சுற்றுப்பயணத்தில்  இருக்கிறார். அதனால் நேரில்  ஆஜராகவில்லை என்று கூறியுள்ளார்.

உடனே ‘‘எங்கு ஆன்மிக நிகழ்ச்சி  நடக்கிறது?’’ என்று நீதிபதி கேட்டார். அதற்கு வக்கீல் ‘‘எங்கு நடக்கிறது    என்பது தெரியவில்லை’’ என்று பதில் அளித்தார். அதைக்கேட்டு அதி்ருப்தியடைந்த  நீதிபதி, ‘‘இதுதான் இறுதி எச்சரிக்கை. வரும் ஜன.3ம் தேதி நித்யானந்தாவை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்’’ என்று  எச்சரித்தார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: