வால்பாறை அருகே சத்துணவு கூடத்தை உடைத்த யானைகள்

வால்பாறை: வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அதேபகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த, பள்ளியில் 80க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.  இந்நிலையில், பள்ளி வளாகத்தில் நேற்று அதிகாலை புகுந்த 2 காட்டு யானைகள், சத்துணவு கூடத்தை உடைத்து சேதப்படுத்தின. இரும்பு கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்த யானைகள், உள்ளே வைத்திருந்த அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றது. அதேபோல், தண்ணீர் குழாய் மற்றும் கட்டிடங்களையும் சேதப்படுத்தி உள்ளது. நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவர்கள் சத்துணவு கூடம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த வால்பாறை நகராட்சி மற்றும் வனத்துறை ஊழியர்கள், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பள்ளியின் சத்துணவு கூடம் சேதமடைந்திருப்பதால், சத்துணவு ஊழியர்கள் வெளியே அடுப்பு அமைத்து மாணவர்களுக்கான மதிய உணவை தயார் செய்தனர். முன்னதாக தகவல் அறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், உடைத்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: