சினிமா பைனான்சியர் தொடர்ந்த நடிகர் ரஜினி மீதான அவதூறு வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம், ரூ.65 லட்சம் கடன் பெற்றிருந்தார். இத்தொகையை திருப்பி கொடுக்கும் வகையில் கஸ்தூரி ராஜா, போத்ராவுக்கு அளித்த காசோலைகள் வங்கியில் பணமின்றி திரும்பி வந்தன. இதையடுத்து கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக போத்ரா, செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இது சம்பந்தமாக நடிகர் ரஜினியை எதிர்மனுதாரராக சேர்த்து  போத்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர்ந்தார். வழக்கை நிராகரிக்க கோரி நடிகர் ரஜினி  தாக்கல் செய்த மனுவில், பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியிருந்தார்.

 இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக  நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் ரஜினி மீது கொடுத்த புகாரில் மனுதாரரின் மதிப்பை கெடுக்கும் வகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் தேவையற்ற தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

யூகத்தின் அடிப்படையிலேயே மனுதாரர் மீது புகார் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார்தாரரின் நோக்கம் மற்றும் செயல்பாடு வெளிப்படையாக தெரிகிறது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த புகார்தாரர் முயன்றுள்ளார். எனவே, ஜார்ஜ் டவுன் 7வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரஜினிக்கு எதிராக புகார்தாரர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று முடிவு செய்து இந்த நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்கிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: