வழக்கமாக டிசம்பரில் நடக்கும் அதிமுக பொதுக்குழு கூடுவது எப்போது? : தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இந்த மாத இறுதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்பதால், அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அதிமுக செயற்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கடைசியாக அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொதுக்குழு ஆண்டு இறுதியில் (டிசம்பர் 31ம் தேதிக்குள்) நடத்தப்படலாம் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழுவை இந்த ஆண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, பொதுக்குழு கூட்டப்படுவதற்கு 15 தினங்களுக்கு முன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு கடிதம் அனுப்பப்படும். ஆனால் இதுவரை யாருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்படவில்லை.

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடத்தில் கேட்டபோது, “பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுவிட்டதால் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுக்குழு உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்பும் வகையில் மாவட்ட செயலாளர்களிடம் பெயர் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பட்டியலை இன்னும் வழங்கவில்லை. எனவே இந்த மாதம் நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை” என்றனர்.மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தலைமை சார்பில் கடிதம் எழுதப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் பொதுக்குழு குறித்த பேச்சு தொண்டர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: