தரங்கம்பாடி அருகே கடல் சீற்றத்தால் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே வங்க கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் கடல்கரையில் நிறுத்தி வைப்பட்டிருந்த பைபர் படகுகள் தூக்கி வீசப்பட்டதில் கடும் சேதமடைந்தன. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி கடற்கரையில் நேற்று கடல் கொத்தளிப்பாகவும், அதிகம் சீற்றத்துடனும் இருந்தது. கடல் சீற்றம் காரணமாக 100 மீட்டர் தண்ணீர் உள்ளே வந்தது. வேகமாக வந்த கடல் தண்ணீர் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை புரட்டி போட்டும் தூக்கி வீசியும் உள்ளன. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: கஜா புயல் அடித்த நாளில் இருந்து நாங்கள் இன்னும் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. கடல் சீற்றமாக இருப்பதால் தொழிலுக்கு செல்லமுடியவில்லை. இது போன்ற காலகட்டங்களில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்பு பகுதியிலும் சேதத்தை விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரில் இரவு நேரத்தில் யாரும் சரியாக தூங்குவதும் இல்லை. எப்போது தண்ணீர் வருமோ என்ற பயத்தில் உள்ளோம்.

எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு சின்னங்குடி கடற்கரையில் கருங்கல் சுவர் அமைக்க  வேண்டும். அப்போது தான் சின்னங்குடி மக்களை காப்பாற்ற முடியும். சில வருடங்களுக்கு முன் இது போன்று சூறாவளி காற்றில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து குடிசைகள் எல்லாம் தண்ணீரில் மிதந்தன. இப்பகுதி மீனவ மக்களை காப்பாற்ற அரசு கருங்கல் சுவர் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் சின்னங்குடி கடற்கரையில் கருங்கல் சுவர் எழுப்பும் பணியை துவக்க வேண்டும் என்று கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: