தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர் 21 பேர் மதுரை அருகே சுற்றிவளைப்பு

மதுரை:  மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா ரோட்டில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் பாஸ்கரன் (65). அருகிலேயே இவரது வீடு உள்ளது. கடந்த 6ம் தேதி அதிகாலை பாஸ்கரன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். அசிறிது நேரத்தில் அவரது வீட்டு காவலாளி, பால் வாங்குவதற்காக வெளியே வந்தார். அப்போது துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல், அவரை வீட்டிற்குள் தள்ளிச் சென்றது. கர்சீப்பால் முகத்தை மூடியிருந்த அந்த கும்பல், டாக்டரின் மனைவி மீரா (60), வேலைக்கார பெண் மற்றும் காவலாளி ஆகிய மூவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். இதுபற்றி டாக்டர், மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில், கொள்ளை கும்பல் திருமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது.  திருமங்கலம் அருகே ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்த கணபதி என்ற குருட்டு கணபதிக்கு (39) கொள்ளையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. முதலில் அவரை தனிப்படை மடக்கியது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பெரிய நெட்ஒர்க் மூலம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. குறிப்பாக, முக்கியப் பிரமுகர்களின் வீடுகளை டார்கெட் வைத்து கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. குருட்டு கணபதியிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது செல்போனில் வந்த அழைப்புகளுக்கு, தங்கள் முன்னிலையில் கணபதியை பேச வைத்துள்ளனர்.

இந்த உரையாடல் மூலம், கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 20 பேர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மதுரை வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் இரவில் முகாமிட்டனர்.

 தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கிய கன்னியாகுமாரி அகத்தீஸ்வரம் ராஜேஷ் (41), மதுரை விராகனூர் பழனிவேல், சுரேஷ், வில்லாபுரம் மணிகண்டன், திருமங்கலம் காமராஜர்புரம் பகுதி கார் டிரைவர் மாரிமுத்து, மதுரை ஹரிகிருஷ்ணன், கண்ணன், வாடிப்பட்டி அய்யங்கோட்டை செல்வம், வேடசந்தூர் சிவக்குமார் உட்பட 21 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். சிக்கிய அனைவரையும் மதுரையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்தும் கொள்ளைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள், லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

கோவாவில் உல்லாசம்

தமிழகத்தில் கொள்ளையடிக்கும் பணத்துடன் இந்தக் கும்பல் கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லுமாம். அங்கு, கையில் இருக்கும் பணம் தீரும் வரை பெண்களுடன் உல்லாசமாக இருந்து, ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர். தற்போதும் கோவாவிற்கு சென்று விட்டு சென்னை வழியாக மதுரை வந்த போது தான் கும்பல் போலீசாரிடம் சிக்கி இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: