தேன்கனிக்கோட்டை வனத்தில் 100 காட்டு யானைகள் முகாம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் மீண்டும் 100 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் பீதியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு 60 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வந்தன. நேற்று முன்தினம் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த அந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினர். தற்போது 30 யானைகள் மட்டும் தேன்கனிக்கோட்டை வனத்திற்குள் சென்றுள்ளன. மற்ற 30 யானைகளும் ஓசூர் வனப்பகுதியிலேயே இருக்கின்றன. இந்நிலையில், விரட்டப்பட்ட 30 யானைகளுடன் 65க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ஓசூர் வனப்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளன.

இவை, பேரண்டப்பள்ளி, போடூர், சானமாவு பகுதிகளில் தங்களுடைய குட்டிகளுடன் முகாமிட்டு சுற்றிதிரிகின்றன. தனித்தனி குழுக்களாக பிரிந்துள்ள அவற்றை ஒருங்கிணைத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் வனத்துறையினர் விரட்டியடித்தனர். நேற்று காலை 70 யானைகள் போடிச்சிப்பள்ளி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டைக்கு வந்திருக்கின்றன. ஏற்கனவே, தேன்கனிக்கோட்டை அருகே பேவநத்தம் பகுதியில் 30 யானைகள் முகாமிட்டிருந்த போதும், மொத்தம் உள்ள 100 யானைகளும் பல பிரிவுகளாக பிரிந்து சூரப்பன்குட்டை, வட்டவடிவப்பாறை, போடிச்சிப்பள்ளி பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை ஒன்றிணைத்து, மரகட்டா வனப்பகுதி வழியாக ஜவளகிரிக்கு விரட்டும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: